நான் ஏன் சுய-முன்னேற்றத் துறையில் ஈடுபாடு காட்டுகின்றேன்?

என்னை இதில் ஈடுபடத் தூண்டிய விடயம் என்ன?

எனது இலக்கு என்ன?

இப்படியான கேள்விகளை வளவாழ்வு வாசகர்களும், என்னோடு பழகுவோரும் அடிக்கடி கேட்கின்றனர். எனவே, இவை பற்றி சுருக்கமாகவேனும் விளக்க வேண்டியுள்ளேன்…

நம் சூழலில் உள்ள அனைவரையும் போல், நானும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பமொன்றில் பிறந்தவன் தான். எனது பெற்றோர் அரச உத்தியோகத்தர்கள். தொழில் வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு என்று எனது குடும்பம் மிகவும் பிஸியாக இருந்தது.

நான் இப்போது இருக்கும் நிலைக்கும், என் பாடசாலைப் பருவத்தில் நான் இருந்த நிலைக்கும் இடையில் மிகப் பாரிய  வேறுபாடுகள் இருக்கின்றன. அதை மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு என்று தான் சொல்ல வேண்டும். பாடசாலை பருவத்தின் பெரும் பாகம் (insecurity) பாதுகாப்பின்மை உணர்வுடனேயே கழிந்தது. எதற்கெடுத்தாலும் மிக அவசரமாக கோபமடைவேன். என்னிடம் தன்னம்பிக்கை இருக்கவே இல்லை. வெட்க சுபாவமும் மேலோங்கியிருந்தது. பெரும்பாலானோரின் வார்த்தைகளினால் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டேன்.

என் பெற்றோர் என் கல்வியில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணமாக, என் கல்வி நிலை திருப்திப்படும் நிலையில் இருந்தது. ஆனால், நான் எதிர்பார்க்கும் வகையில் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்ததனால், என்னால் அவர்களுடன் நிலையான உறவைப் பேண முடியவில்லை..  

இவ்வாறு உளவியல் ரீதியாக மிகவும் வலிமை குறைந்த நிலையிலிருந்த என்னை, தன்னம்பிக்கையும், ஆற்றல்களும், அடைவுகளும் நிறைந்த ஒரு ஆளுமையாக மாற்றிக்கொள்வதற்கான முதல் விதை போடப்பட்டதும் அந்தப் பாடசாலைக் காலத்தின் இறுதிப் பகுதியில் தான். ஆம், அவை தான் என் வாழ்வை புரட்டிப் போட முதல் விதை தூவப்பட்ட கணங்கள். அதுவொரு சுவையான அனுபவம்.

என் மூத்த மாமாவின் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவர் ஒரு தேர்ந்த வாசகர். இலக்கியத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். கலாபூஷணம் பட்டம் கூடப் பெற்றிருக்கிறார். ஒரு தடவை அவரது வீடு சென்றபோது, வாசிக்கலாம் என ஒரு புத்தகத்தை கையிலெடுத்தேன். புகழ்பெற்ற தமிழ்நாட்டு எழுத்தாளர் அப்துற் றஹீமின் ‘விடா முயற்சியே வெற்றிக்கு வழி!‘ என்ற புத்தகம் அது.

அப்புத்தகம் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருந்தன. புத்தகத்தின் மொழிநடையையும் என்னால் சரிவர அனுசரிக்க முடியாதிருந்தது. எனவே, அப்புத்தகத்தை முழுமையாக வாசித்து, கிரகிக்க முடியாமல் போனாது. ஆனால், அப்புத்தகம் இத்துறையின் பால் என்னை ஈர்த்தெடுத்தது எனலாம்.

என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ‘எண்ணமே வாழ்வு’ புத்தகம்

நான் 10 ஆம் தரத்தில் கற்கும்போது, தமிழ் பாடப் புத்தகத்தில் ‘மனதின் விந்தை’ என்றொரு பாடம் இருந்தது. அப்துற் றஹீமின் ‘எண்ணமே வாழ்வு‘ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி அது. அந்தப் பாடத்தால் கவரப்பட்ட நான், எண்ணமே வாழ்வு என்ற புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். என் வாழ்வில் நான் வாங்கிய முதலாவது சுய முன்னேற்ற நூல் இதுதான்.

பின்னர், சுய முன்னேற்றத் துறையில் எனது ஆர்வம் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. தமிழ் மொழியிலான இத்துறை நூல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் நம் நாட்டில் குறைவாக இருந்ததால், சுய முன்னேற்றம் தொடர்பிலான சிங்கள மொழி நூற்களின் பால் சென்றேன். சுமனதாச சமரசிங்க (Sumanadasa Samarasinghe) மற்றும் தயா ரோஹன அதுகோரால (Daya Rohana Athukorala) ஆகியோரின் புத்தகங்களை அதிகம் வாசிக்கலானேன்.

இப்போது என் அளுமையில் பல மாற்றங்களை; நிகழ்வதை நான் உணரத் தொடங்கினேன். ஆரம்பத்தில் என்னிடமிருந்த பாதுகாப்பற்ற உணர்வு, வெட்க சுபாவம், தன்னம்பிக்கையின்மை எல்லாம் படிப்படியாக குறைவதை உணர்ந்தேன். அது இயல்பாகக் குறைந்தது என்பதை விட, நான் பெற்றுக்கொண்ட அறிவின்படி, அவற்றை நானே மாற்றிக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

வெற்றிகரமானவர்கள் எல்லாம் பிறக்கும்போதே வெற்றியாளர்களாக வந்ததாகவே நினைத்தேன். ஆனால். புத்தகங்கள் வாசித்தபோதுதான் தெரிந்துகொண்டேன் வெற்றியாளர்கள் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்டுள்ளார்கள் என்று.

இப்படியிருக்கையில் உயர்தரப் பரீட்சையும் நெருங்கியது. பரீட்சைக்குரிய பாடப் புத்தகங்களை படிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, சுய முன்னேற்றம் மற்றும் உளவியல் புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்ததால், முறையாக பரீட்சைக்கு தயாராக முடியாமல் போனது. எனவே, உயர் தரப் பரீட்சையில் நான் சித்தியவடையவில்லை.

ஆனால், என் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் நான் விட்டுவிடவில்லை. உயர் தரப் பரீட்சைக்குரிய பாடங்களில் அதிக கவனம் செலுத்திப் படித்தேன். இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்தேன்.

எல்லலோரும் பௌதிக விஞ்ஞானத் துறையில் உயர் கல்வியைத் தொடருமாறு கூறியபோது, நான் எனது பேரார்வத் துறையான தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்றேன்

பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக, பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக நுழைவின்போது எனது ஆங்கில அறிவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல்கலைக்கழக நுழைவின்போது வழங்கப்பட்ட ஆங்கில மொழி மூல அறிமுக நூலின் முதற் பந்தியை வாசித்துப் புரிய 2 மணித்தியாலங்கள்  எடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆனால், நான் தளரவில்லை. என் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டேன். பல்கலைக்கழக பாடங்களுக்கு அப்பால் சுய முன்னேற்றம் குறித்து ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூல்களை யும் வாசிக்கத் துவங்கினேன்.

இப்படி தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களின் ஊடாக சுய முன்னேற்றம் குறித்து நான் கட்டம் கட்டமாகப் பெற்ற அறிவு, என்னை பெருமளவில் வளர்த்துக்கொள்வதற்கு துணையாக இருந்தது. எனவே, நான் பாடசாலைக் காலத்தில் இருந்த நிலையை விட பன்மடங்கு முன்னேற்றம் கண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கத் துவங்கினேன்.

இப்போது நான் பல்கலைக்கழக வாழ்வை நிறைவு செய்திருந்தேன். சுய முன்னேற்றத் துறையில் நான் பெற்றிருந்த அறிவும், என்னை நானே மாற்றிக்கொண்ட அனுபவமும் என்னோடு மட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதை ஆழமாக உணர்ந்தேன். இந்த மாபெரும் பொக்கிசத்தை ஏனையோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனவே, நண்பர்களுடனும், நெருங்கியோருடனும் இவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.

Cinergix இல் எனது desk

நான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படிக்கும் காலம் முதல், பல நிறுவனங்களின் செயற்றிட்டங்களை Freelance ஆக செய்து வந்தேன். எனவே, சுயமாக இயங்கி, தொழில் செய்த அனுபவம் எனக்கு இருந்தது. அத்தோடு, நான் வாசித்த புத்தகங்களிலிருந்தும், பின்பற்றிய ஆளுமைகளிலிருந்தும் பெற்ற உந்துதலின் காரணமாகவும்பல்கலைக்கழக வாழ்வைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்தில் தொழிலுக்குச் செல்வதை விட,  Business startup (தொடக்க நிலை வணிகத்தை) ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என்னில் மேலோங்கியிருந்தது.

ஆனால், என் பெற்றோரின் விருப்பம் – நான் ஒரு தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. தொழில் உத்தரவாதமும் (job security), நிரந்தர வருமானமும், வயோபத்தின்போது கிடைக்கும் ஓய்வூதியமும் (penson) தான் அவர்களின் விருப்புக்கான காரணங்களாக இருந்தன. இறுதியில் தொழிலுக்குச் செல்வதென்று முடிவெடுத்தேன். Cinigex என்ற நிறுவனத்தில்  வேலைபெற்றேன். இந்த நிறுவனத்தில் பணிபுரியும்போது பல்வேறு விடயங்களை நான் கற்றுக்கொண்டேன்.

ஆனாலும்,  தொழிலில் இணைந்து 4 மாதங்களிலேயே அதிலிருந்து விலகினேன். அமெரிக்காவின் சிலிகன் வெலியிலுள்ள Start Ups (தொடக்க நிலை வணிகங்கள்) போல் ஒரு தொடக்க நிலை வணிகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற என் அவா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அந்த அவா என்னை எப்போதும் தூண்டிக்கொண்டே இருந்தது. ஈற்றில் என் தாயிடம் இது பற்றி மனம் திறந்து பேசினேன். அவர்களும் என் அவாவைப் புரிந்து சம்மதித்தனர்.  எனவே, Cinigex நிறுவனத்திலிரந்து விலகி, என் பெற்றோர் வாங்கித் தந்திருந்த laptop (மடிக் கணிணி) உடன் என் படுக்கை அறையிலிருந்து Frontcube என்ற பெயரில் என் start up கம்பனியை ஆரம்பித்தேன்.

என் படுக்கை அறையிலிருந்து Frontcube ஐ ஆரம்பித்த நாள்.

Frontcube நிறுவனத்தை ஆரம்பித்து சில காலம் கடந்து சென்றது. ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது. சிலபோது, பெருமளவு வீழ்ச்சியும் கண்டது. எனவே, மிகுந்த பொருளாதார நெருடிக்கயை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு தடவை நானும் என் மனைவியும் வெறும் 72 ரூபா பணத்தோடு, ஒரு வாரத்தைக் கடத்தும் நிலை கூட ஏற்பட்டிருக்கின்றது.

Frontcube நிறுவனத்தை வளர்க்க வேண்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தாண்டிச் செல்ல வேண்டும் என்ற அதீத ஆர்வம், என்னை இன்னும் இன்னும் கற்கத் தூண்டியது. என் நிறுவனத்தை எப்படியெல்லாம் வளர்க்கலாம், அதற்காக என்னை எப்படியெல்லாம் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று கற்கத் தொடங்கினேன்.

இங்கு பெற்ற அறிவு, அனுபவம், படிப்பினைகளைக் கொண்டு Frontcube நிறுவனத்தை மீளொழுங்குபடுத்தி செயற்படத் துவங்கினேன். இப்போது Frontcube நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்க ஆரம்பித்தது.  உலகின் முதல் தர நிறுவனங்களான Al Jazeera Network செய்தி நிறுவனம், Microsoft , TRT World செய்தி நிறுவனம் முதலிய நிறுவனங்கள் என் நிறுவனத்தை நாடி வந்தன. இப்போதும் நாளுக்கு நாள் பல நிறுவனங்கள் என் நிறுவனத்தை நாடி வந்த வண்ணமுள்ளன.

முதலாவது உத்தியோகபூர்வ Frontcube Office ஐ ஆரம்பித்த நாள்.

Frontcube நிறுவனத்தை – எவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொணடு செல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேனே அந்தளவு உயரத்துக்கு நிறுவனத்தைக் கொண்டு வந்தேன். எனவே, எனது வாழ்வின் பணி முடிவடைந்து விட்டதுவோ என்றொரு எண்ணம் என்னுள் எழுந்தது. இனி நான் செய்ய வேண்டிய பணிகள் எதுவமில்லை என்ற வெறுமை என்னுள் ஏற்பட்டது.  மனநிறைவு பெறாத வெற்றி உண்மையில் வெற்றியே அல்ல என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன்.

இப்போது எனது கற்றல் வழிமுறை ‘புத்தகங்களிலிருந்து கற்றல்’ என்பதைத் தாண்டி, உலகப் புகழ்பெற்ற சுய முன்னேற்ற ஆசான்களிடம் நேரடியாகக் கற்க வேண்டும்

Frontcube இன் ஐந்தாண்டு பூர்த்தியின் போது

என்ற நிலைக்குச் சென்றது. எனவே, உலகப் புகழ்பெற்ற சுய முன்னேற்ற ஆசான்களிடம் கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றேன். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டேன்.

தொடர்ந்தும் என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக இன்னும் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டேன். சுய முன்னேற்றம் தொடர்பில் வாசித்து பெற்ற அறிவு, நான் என்னை மாற்றிக்கொண்ட அனுபவம் எல்லாவற்றையும் ஏனையோருடன் பகிர்ந்து, அவர்களது வாழ்வையும் ஒளிபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘வளவாழ்வு’ என்ற இணையதளத்தை உருவாக்கினேன். அதில் சுய முன்னேற்றம் தொடர்பில் எனது வீடியோக்களையும், கட்டுரைகளையும் பதிவிட்டு வரத் தொடங்கினேன்.

இப்படி என் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கையில், உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்ட சில இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பிரச்சினைகளை  நன்கு புரிந்துகொண்டு, மிக இலகுவாக அவற்றிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர என்னால் முடிந்தது. அவர்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து முகம் மலர்ந்தபோது, நான் நான் உணர்ந்த மனநிறைவுக்கு அளவே கிடையாது.

இந்தத் தருணம் தான் என் வாழ்வின் பணி என்ன என்பதை நான் புரிந்துகொண்ட அற்புதமான தருணம். ஆம், சூழல் காரணிகளால் ஏற்படும் உள ரீதியான பிறழ்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி, வாழ்வில் சாதித்து வெற்றி பெறும் ஒரு தலைமுறையை உருவாக்க நான் பாடுபட வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனை முறையாக ஒழுங்குபடுத்தி செய்ய வேண்டும் என்பதால், ‘வளவாழ்வு’ என்ற நான் ஆரம்பித்த இணையதளத்தை – ஒரு தனி நிறுவனமாக அமைத்து இயங்கத் தொடங்கியுள்ளேன்.

கடல் தாண்டி சென்ற எனது சுய அபிவிருத்தி தேடல்!

என் வாழ் நாளில் ஒரு மில்லியன் (1,000,000) மக்களின் வாழ்வை சுய முன்னேற்ற ரீதியில் மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வகுத்து செயற்படத் தொடங்கியுள்ளேன்.

அவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அவர்களை வெற்றிபெற்றபவர்களாக்க வேண்டும் என்று அவாவுகிறேன். அதற்காக ஒரு வாழும் முன்னுதாரணமாக (living example) நானும் இருக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

என் வாழ்வில் நான் இவ்வளவு காலமும் கடந்து வந்திருக்கும் காலத்தில் என்னில் நான் ஏற்படுத்திய மாற்றங்களும், அடைந்த அடைவுகளும் உங்களது வாழ்வையும் மாற்றிக் கொள்ள உந்துதலாக இருக்கும் என்ற நான் நம்புகின்றேன். நன்றி.