இன்று நாம், என் வாழ்வில் அதிகம் தாக்கம் செலுத்திய ஒரு கதையைப் பார்க்கப் போகின்றோம்.

ஒரு ஊரில் ஒரு இளைஞன் வாழ்ந்து வருகிறான். வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரத்தை நன்கு முன்னேற்ற வேண்டும் என்று பல கனவுகளுடன் வாழும் இளைஞன் இவன். இவ் இளைஞன் வாழ்ந்த அதே நாட்டில் வெற்றிகரமான ஒரு தொழில்முனைவாளரும் இருந்தார். இவர் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு, வாழ்வில் வெற்றிபெற்ற ஒரு மனிதர்.

இந்த தொழில்முனைவாளரைப் போன்று வர வேண்டும் என்பது தான் இளைஞனின் அவா. அவரைத் தான் Role Model (முன்னுதாரண புருஷர்) ஆகவும் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த தொழில்முனைவாளர் ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக, இளைஞனின் ஊருக்கு வரவுள்ளதாக செய்தி கிட்டியது.

தொழில்முனைவாளர் நிகழ்வில் பங்கெடுக்க வந்தபோது, அவரை சந்தித்த இளைஞன், ‘நான் உங்களைப் போன்று ஒரு வெற்றிகரமான தொழில்முனைவாளராக வர வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் தான் என் Role Model.  வாழ்வில் எப்படி முன்னேறலாம் என்று நீங்கள் எனக்கு கற்றுத் தர வேண்டும். அதற்காக நான் எதுவென்றாலும் செய்யத் தயாராக உள்ளேன்.’ என்று ஆவல் ததும்பக் கூறினான்.

இளைஞனின் வார்த்தைகளைக் கேட்ட தொழில்முனைவாளர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்: ‘சரி… நாளை அதிகாலை 4.30 மணிக்கு கடற்கரையோரம் வா. வாழ்வில் என்னைப் போல் எப்படி முன்னேறுவது என்று நான் உனக்கு கற்றுத் தருகிறேன்…’

மிகவும் சந்தோசமடைந்த இளைஞன், ‘இனி மேல் என் வாழ்வில் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. நான் 4.30 மணிக்கு வருகிறேன்…’ என்று கூறிவிட்டுச் சென்றான்.

நாளை அதிகாலை தனது Role Model நபரை சந்திக்கப் போவதை நினைத்து அவனுக்கு தூக்கமே வரவில்லை. எப்படியோ புரண்டு புரண்டு படுத்து தூங்கிவிட்டான். பின்னர், அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து விட்டான். கடற்கரைக்குச் செல்லத் தயாராகி, 4 மணிக்கே கடற்கரையையும் அடைந்து விட்டான்.

சரியாக 4.30 மணி ஆகும்போது தொழில்முனைவாளரும் கடற்கரைக்கு வந்து விட்டார். பின்னர் கீழ்வரும் உரையாடல் நிகழ்ந்தது:

‘நேரகாலத்துடன் வந்துவிட்டாய் போலும்..’

‘ஆம்…’

‘சரி, கடலை நோக்கி நட!’

‘நான் உங்களிடம் கற்றுக்கொள்ளத்தான் வந்தேன். எனக்கு கற்றுத் தாருங்கள்.’

‘ஆம்… கற்றுத் தரத்தான் போகிறேன். கடலை நோக்கி நட…!’

தொழில்முனைவாளர் கூறியவாறு, அந்த இளைஞன் கடலை நோக்கி நகர்ந்தான். இப்போது கரண்டைக் காலளவு நீர் வந்துவிட்டது. சற்று திரும்பி தொழில்முனைவாளரைப் பார்த்தான். ‘இன்னும் செல்!’ என்று தொழில்முனைவாளர் கூறினார். எனவே, இளைஞனும் முன்னே சென்றான். இப்படி முழங்காலளவு, இடுப்பளவு, இறுதியில் கழுத்தளவு வரையிலும் நீர் வந்து விட்டது.

‘நான் வாழ்வில் முன்னேறுவது எப்படியென்று கற்றுக்கொள்ளத்தானே வந்தேன். இவர் ஏன் என்னை கடலுக்குள் போகச் சொல்கிறார்.? ஒருவேளை என்னை கொலை செய்யப் போகிறாரோ!’ என்று இளைஞன் மனதில் எண்ணிக் கொண்டிருந்தான்.

இளைஞனின் அருகே வந்த தொழில்முனைவாளர் இளைஞனின் தலையை பிடித்து நீருக்குள் அமுக்கினார். இளைஞன் சுவாசிக்க முடியாது திணறினான். தொழில்முனைவாளர் தொடர்ந்தும் நீருக்குள் அமுக்கினார். பின்னர், சற்று தலையை வெளியே எடுத்து மீண்டும் நீரூக்குள் அமுக்கினார். சுவாசிக்க முடியாது திணறினான் இளைஞன். எப்படியோ சிறிது நேரத்தில் இளைஞனை விட்டுவிட்டார் தொழில்முனைவாளர்.

சுவாசிப்பதற்குப் போராடிய இளைஞன் மெதுவாக கரைக்கு வந்து இளைப்பாறினான். சற்று நேரத்தில், தொழில்முனைவாளரைப் பார்த்து, நீங்கள் எனக்கு என்ன செய்யப் பார்த்தீர்கள்? என்று கேட்டான்.

அதனைத் தொடர்ந்தும் பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது:

‘இளைஞனே! நான் உன்னை கடல் நீருக்குள் அமுக்கியபோது உனக்கு எது தேவைப்பட்டது?’

‘ஆ..ஆ… எனக்கு சுவாசிக்க வேண்டியிருந்தது.’

‘அப்படியா… அந்த நேரத்தில் உனக்கு விருப்பமான திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்று யோசித்தாயா?’

‘இல்லை…’

‘வீட்டைப் பற்றி யோசித்தாயா?’

‘இல்லை…’

‘நீ கொடுத்திருக்கும் கடன்கள் பற்றி யோசித்தாயா?’

‘இல்லை…’

‘நீ வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கின்ற பொருட்கள் பற்றி யோசித்தாயா?’

‘இல்லை…’

‘இன்று இரவு என்ன சாப்பிட வேண்டும் என்று நினைத்தாயா?’

‘இல்லை…’

‘அப்படியென்றால், நான் உன்னை நீரில் மூழ்கடித்தபோது எப்படியாவது சுவாசிக்க வேண்டும் என்ற தேவைதான் உனக்கிருந்தது என்கிறாய்?’

‘ஆம்… அதுவேதான்.’

இந்த உரையாடலைத் தொடர்ந்து தொழில்முனைவாளர் அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார்:

‘எப்போது –  நீ வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது நீ சுவாசிப்பதை விட முக்கியமானதாக மாறுகிறதோ, அப்போது தான் நீ வாழ்வில் வெற்றி பெறுவாய்!’

***     ***     ***

இந்தக் கதையை இப்போது நமது வாழ்வில் பிரயோகித்துப் பார்ப்போம்…

நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன. நாம் எழுதி முடிக்க வேண்டிய ஒரு ஆய்வுக் கட்டுரை இருக்கலாம். படிக்க வேண்டிய பரீட்சைத் தாள்கள் இருக்கலாம். இவை எல்லாம் ஒரு புறமிருக்க ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லது, பேஸ்புக், இன்ஸ்டகிராம், டுவிட்டரில் உலாவிக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் யாரிடம் கேட்டாலும், பரீட்சைகளில் சித்தி பெற வேண்டும், தொழிலில் முன்னேற வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இவற்றையெல்லாம் அடைவதற்கு இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால், பதிலின்றி வாயடைத்துப் போவார்கள்.

சுய முன்னேற்றத் துறையின் முன்னோடி என அழைக்கப்படுகின்ற தலைசிறந்த எழுத்தாளர் நெபோலியன் ஹில் தனது Think and Grow Rich என்ற நூலில், ஒருவரிடம் காணப்பட வேண்டிய முதலாவது பண்பு – ஒரு விடயத்தை அடைந்துகொள்வதற்கான கொழுந்து விட்டெரியும் ஆசை என்று சொல்கிறார்.

பொதுவாக எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன. நன்றாகப் படிக்க வேண்டும், தொழிலில் முன்னேற வேண்டும், வியாபாரத்தை முன்னேற்ற வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அதற்கான அர்ப்பணிப்புக்களை செய்வதற்கு எவரும் தயாராக இல்லை.

எனவே, எமது இலக்குகள் மீது கொழுந்து விட்டெரியும் ஆசையை ஏற்படுத்திக்கொள்வோம். அதற்காக அர்ப்பணிப்புடன் உழைப்போம்!

***     ***     ***

உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.

கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்!

வாழ்க என்றும் வளமுடன்!

வளவாழ்வு குரூப் இல் இணைய இங்கு கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/groups/1189863434394830/

#valavaalvu