நான் உயர்தரம் படிக்கும் வரையில், நிறைய நாவல்கள் வாசித்தேன். துப்பறியும் நாவல்களில் நாட்டம் அதிகம். ஆனால், உயர் தரத்தின் பின்னர் என் வாசிப்பு சுய முன்னேற்ற துறை நோக்கி நகர்ந்தது. எனவே, ஒரு நாவலை வாசிப்பது நேர விரயம் போல் உணர்ந்தேன். இப்படி – 12 வருடங்களின் பின்னர் நான் வாசிக்க எடுத்த நாவல் தான் பிரேசில் நாட்டு எழுத்தாளர் பௌலோ குவேலோ எழுதிய அல்கெமிஸ்ட் என்ற நாவல்.
இந்த நாவல் அடிப்படையில் போர்த்துக்கேய மொழியிலேயே எழுதப்பட்டது. பின்னர், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது இந்த நாவலின் 150 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அல்கெமிஸ்ட் என்றால் இரசவாதி என்று பொருள். உலோகம், செப்பு போன்ற உலோகங்களை பெறுமதி வாய்ந்தவையாக மாற்றும் இரசாயன சூத்திரங்களை அறிந்த நிபுணர் என்றும் சொல்லலாம். இந்த நாவலின் பெயர் இதுவாக உள்ளபோதும், ஓட்டு இடையச் சிறுவன் தனது வாழ்வின் பொக்கிசத்தைத் தேடிச் செல்வது பற்றிய கதையாகவே இத உள்ளது.
இந்தப் பயணத்தின்போது அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், சோகங்கள், சந்தோசங்கள், காதல்… என்று பல்வேறு விடயங்கள் பற்றி இந்நாவல் பேசுகின்றது. இந்தப் பயணத்தின் இடையில் உண்மையில் ஒரு இரசவாதியை இச்சிறுவன் சந்திக்கின்றான். அவர் சிறுவனுக்கு கற்பிக்கும் சில வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றியும் இந்நாவலில் பேசப்படுகின்றது.
இந்த நாவல் 165 பக்கங்களைக் கொண்டது. இவ்வளவு சிறிய தொகைப் பக்கங்களுக்குள் வாழ்வின் ததத்துவங்களைச் சுருக்கிச் சொல்வது அசாத்தியமே. ஆனால், இந்நாவலின் ஒவ்வொரு பக்கங்களும் வாழ்க்கை தத்துவங்களை அழகாகச் சொல்கின்றன. நான் இந்நாவலை வாசிக்க எடுத்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வழமையான மசாலா நாவல்கள் போலல்லாது, வாழ்க்கை தத்துவங்களை திறம்படவும் அழகாகவும் இந்நாவல் விளக்குகின்றமைதான்.
இவ்வளவு சிறிய தொகைப் பக்கங்களுக்குள் ஒரு கதை நகர்த்திச் செல்லப்பட்டு, அதன் ஊடாக வாழ்க்கை தத்துவங்கள் எவ்வளவு கச்சிதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்துகின்றது. இந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல். ஒவ்வொரு வருடமும் இந்த நாவலை நான் வாசித்து வருகின்றேன். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் வாசித்தேன்.
இந்த நாவலை ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் புதுப் புது விடயங்களை நான் புரிந்துகொள்கின்றேன். முன்னைய வருடம் புரியாத விடயங்கள் பின்னைய வருடத்தில் புரிகின்றன. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு வருடமும் என் வாழ்க்கை கடந்து சென்றுகொண்டிருக்கும் இடத்துக்குப் பொருத்தமான விடயங்கள் இந்நாவலில் மிகத் தெளிவாகப் பளிச்சிட்டுத் தெரியும்.
பொதுவாக புத்தகங்களை வாசிக்கும்போது தூக்கம் வருவதாகவும், அலுப்புத் தட்டுவதாகவும் சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள். இந்த நண்பர்கள் ஆர்வத்துடன் வாசிக்க வேண்டுமாயின், நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகமும் அல்கெமிஸ்ட் தான். ஏனெனில், இந்த நாவலின் கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாக நகர்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தினால் நாம் இயல்பாகவே புத்தகத்தை வாசித்து முடித்து விடுவோம்.
புத்தகம் சொல்லும் சில கருத்துக்கள்
இந்தப் புத்தகத்திலிருந்து நான் பெற்ற சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்…
நீங்கள் உங்களது நோக்கத்தை சரியாகத் தெரிந்துகொண்ட பின்னர், அதை அடைவதற்காகச் செல்லும் பயணத்தில் என்ன தடைகள் வருகின்றபோதும், முழுப் பிரபஞ்சமுமே உங்களது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று நாவலாசிரியர் பௌலோ குவேலோ குறிப்பிடுகிறார்.
இந்த விடயத்தை எனது வாழ்விலும் நான் அனுபவித்திருக்கின்றேன். நான் ஏதாவது ஒரு இலக்கை வரையறுத்து, அதை அடைவதற்காகச் செயற்படத் தொடங்கும்போது, அதற்கு உதவும் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அதுவரையில் எனக்குப் புரியாதிருந்த சில விடயங்கள் புரிய ஆரம்பித்திருக்கின்றது. எனவே, இந்த நாவலாசிரியர் குறிப்பிடும் விடயத்தை நான் அனுபவித்து உணர்ந்திருக்கின்றேன். இந்த தத்துவத்தை நாவலின் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
அவர் இன்னுமொரு முக்கியமான கருத்தையும் இந்த நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அதவாது, ‘உங்களுடைய இதயம் எங்கிருக்கின்றதோ, அங்கு தான் உங்களுக்கான பொக்கிசம் இருக்கும்.’.
இங்கு இதயம் என்பதன் மூலம் அவர் கருத வருவது எங்களது இதயத்தை அல்ல. மாறாக, எங்களது ஆர்வம், ஆசை… நான் இன்னுமொரு வீடியோவில் குறிப்பிட்டது போன்று எங்களது கொழுந்து விட்டெரியும் ஆசை எதில் உள்ளதோ, அதில் தான் எங்களது பொக்கிசம் காணப்படும். இதை நான் பல இடங்களில் கண்டிருக்கின் றன்.
எனது நண்பரொருவர் எழுத்துத் துறையில் தனது வாழ்வைத் துவங்கினார். அவர் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். ஆனால், வாழ்வில் ஏற்பட்ட பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக, துறை மாறி வேறு துறையில் தொழிலுக்குச் சென்றார்.
ஒரு நாள் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் மன அழுத்தத்தில் இருப்பது புரிந்தது. காரணங்களைத் தேடிச் சென்றபோது, அவர் எழுத்துத் துறையை இழந்து தவிப்பது நன்கு புலப்பட்டது. எனவே, அவர் நேசிக்கின்ற, விரும்புகின்ற எழுத்துத் துறையில் மீண்டும் இணைந்து பாருங்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.
ஆலோசனையை சிறிது தயக்கத்துடன் ஏற்றுக்கொண்ட அவர், ஒரு பத்திரிகையில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இப்போது அவர் ஒரு பிரபலமான பத்திரிகையில் சிறந்த பதவியில் இருக்கின்றார். மன நிறைவுடன் இருக்கிறார். அவரது பேரார்வம் எழுத்துத் துறையில் இருந்ததால் தான் மன நிறைவு பெற்றிருக்கிறார்.
நாம் தோல்வியடைவோம், கஷ்டப்பட வேண்டிய ஏற்படும் என்ற அச்சமானது, தோல்வியையும், கஷ்டத்தையும் விட கொடூரமானது.
என்ற கருத்தை இந்நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை சரிவரப் புரிகின்றபோது, நம்மிலுள்ள அச்சம் களைந்து போகும். இந்த அற்புதமான கருத்தையும் நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு கனவை அடைந்து கொள்வதை அசாத்தியப்படுத்தும் ஒரே காரணி – தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம்.
என்ற ஆழமான கருத்தையும் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். நெப்போலியன் ஹில் தனது புத்தகத்தில் 6 வகையான பயங்கள் குறித்துப் பேசுவார். அதில் ஒன்று தான் ‘தோல்வியடைவோமோ என்ற பயம்’.
உண்மையில், தோல்வியடைவோமோ என்ற பயம் என்பது விமர்சனத்துக்கு உள்ளாகுவோமோ என்ற பயம் தான். நாம் தோல்வியடைந்தால் ஏனையோர் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள்!? என்ற பயம் தான் அது. இதனால் தான் நமது வாழ்வின் இலக்குகளை, குறிக்கோள்கை அடைந்து கொள்ள முடியாமலிருக்கின்றது.
அல்கெமிஸ்ட் என்ற இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் பெறுமதி மிக்க அறிவுரைகளையும் தத்துவங்களையும் கொண்டிருக்கின்றது. நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டம் என நான் பரிந்துரை செய்கின்றேன்.
*** *** ***
உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.
வாருங்கள், கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்!
வாழ்க என்றும் வளமுடன்!
வளவாழ்வு குழுமத்தில் இணைய இங்கு கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/groups/1189863434394830/
0 Comments