இன்றும் வாழ்க்கைக்கு படிப்பினை தரக்கூடிய அழகான ஒரு கதை பற்றிப் பேசப் போகின்றோம்…
ஒரு விவசாயி தனது கோழிப் பண்ணைக்கு நடந்து செல்கின்றபோது, பாதையில் ஒரு முட்டையை காண்கிறார். அக்கம் பக்கம் பார்த்தால் யாருமே இல்லை. இந்த முட்டை வீணாகி விடுமே என்று எண்ணிய அவர், அதை எடுத்துக் கொண்டு தனது பண்ணைக்குச் செல்கிறார்.
அந்த முட்டையை கோழிப் பண்ணையில் வைத்து விட்டு, தனது பணிகளில் மூழ்கினார் அவர். கோழிகளும் அந்த முட்டையை அடை காத்து வந்தன. நாளடைவில் அந்த முட்டையிலிருந்து ஒரு கழுகு வெளியே வந்தது. அந்தக் கழுகும் கோழிகளுடன் இணைந்து, அவற்றின் உணவுகளையே சாப்பிட்டு, அவற்றைப் போலவே வாழ்ந்து வந்தது.
காலப் போக்கில் உருவில் பெரிய கழுகாய் அது மாறியது. ஆனாலும், ஒரு கோழி எவ்வளவு உயரம் பறக்குமோ அவ்வளவு உயரம் தான் இந்தக் கழுகும் பறந்தது. கோழி சாப்பிடும் உணவுகளை மட்டும் தான் சாப்பிடவும் செய்தது.
இப்படி வாழ்ந்து வந்த இக்கழுகு ஒரு நாள் கோழிகளுடன் வெளியே சென்றபோது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த அழகான கழுகுக் கூட்டமொன்றைக் கண்டது. ஆச்சரியமடைந்த கழுகு, அவை என்னவென்று தாய்க் கோழியிடம் கேட்டது.
அதற்கு அந்த தாய்க் கோழி – ‘இவை கழுகுகள். நாம் இந்தப் பறவைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.’ என்றது. அப்போது அந்தக் கழுகுக் குஞ்சு தனது இறக்கைகளைப் பார்த்தது. அந்தப் கழுகுகளினது சிறகுகளும், தனது சிறகுகளும் ஒரே மாதிரி இருப்பதை அக்குழுகுக் குஞ்சு உணர்ந்தது.
எனவே, அது தாய்க் கோழியிடம், ‘அம்மா… நானும் இந்தக் கழுகுகளும் ஒரே மாதிரி இருக்கின்றோம். அதன் சிறகுகளும் எனது சிறகுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.’ என்று கேட்டது. அதற்கு அந்த தாய்க் கோழி: ‘இல்லை… நீ ஒரு கோழி. நீ எம்மைப் போல் தான் வாழ வேண்டும். நீ ஒருபோதும் கழுகாக மாற முடியாது.’ என்று கூறியது.
அந்த தாய்க்கோழி இக்கருத்தை தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. கழுகுக் குஞ்சும் அதை நம்பி, கோழியாகவே வாழ்ந்து, கோழியாகவே மரணித்துப் போனது.
இதேவேளை, இதற்கு அருகாமையில் இருந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்த ஒரு சிங்கக் கூட்டம் மீது ஒரு தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு தாய் சிங்கம் தனது சிறிய சிங்கக் குருளையை காப்பாற்றுவதற்காக கவ்விச் சென்று ஒரு பள்ளத்தில் போட்டு விட்டது.
இந்தப் பள்ளத்தாக்கில் மேய்ந்துகொண்டிருந்த செம்மறியாட்டுக் கூட்டமொன்று இந்த சிங்கக் குருளையைக் கண்டது. பார்ப்பார், கேட்பார் அற்ற இந்த சிங்கக் குருளையை வளர்ப்பதாக முடிவெடுத்த செம்மறியாட்டுக் கூட்டம், அதை தம்மோடு கொண்டு போய் வளர்த்தது.
நாளடைவில் பெரும் கம்பீரமான தோற்றமுடைய சிங்கமாக அது வளர்ந்தது. ஆனால், அது கர்ச்சிப்பதற்கு பதிலாக செம்மறியாட்டுக் குட்டிகள் போல் கத்தியது. அதையும் விட வேடிக்கை என்னவென்றால், மாமிசம் சாப்பிட வேண்டிய சிங்கம், புல் மற்றும் தாவரங்களையே உண்டு வந்தது.
இப்படியே காலம் ஓடியது… ஒரு நாள் இன்னுமொரு சிங்கக் கூட்டம் செம்மறியாட்டுக் கூட்டத்தை வேட்டையாட வந்தது. எல்லா செம்மறியாடுகளும் அச்சத்தில் விரண்டோடியபோது, செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கமும் செம்மறியாடுகள் போலவே கத்திக் கொண்டு, விரண்டோடியது.
இதைப் பார்த்த ஒரு சிங்கம், செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கத்தைப் பிடித்து, ‘நீ ஏன் ஓடுகிறாய்? நீ வேட்டையாட வந்தால் வேட்டையாடி உன் பங்கை எடுத்துக் கொள்!’ என்றது. ஆனால், செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கம், ‘இல்லை… இல்லை… நான் சிங்கம் அல்ல. நான் ஒரு செம்மறியாடு. இவர்கள் எல்லாம் எனது சகோதரர்கள். இவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.’ என்று கதறியது.
எப்படியோ, செம்மறியாட்டு கூட்டத்தில் வளர்ந்த சிங்கம், ஒரு சிங்கம் தான் என்பதை அதற்கு உணர்த்துவதற்கு வேட்டையாட வந்த சிங்கத்துக்கு அதிக நேரம் எடுத்தது. இறுதியில், அந்த செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்த சிங்கத்தை ஒரு குளத்துக்கு இழுத்துச் சென்று, ‘உன் முகத்தைப் பார். நீ ஒரு சிங்கம் என்பதை உணர்.’ என்று சொன்னது வேட்டையாட வந்த சிங்கம்.
இவ்வளவு நாளும் தன்னை ஒரு செம்மறியாடாகவே நினைத்து வந்த சிங்கம், இதற்கு முன்னர் நீர் பருகும்போது கூட தன்னை ஒரு செம்மறியாடாகவே பார்த்து வந்தது. இப்போது, நீர் அருந்தும் போது அது ஆச்சரியமடைந்தது. ஆனாலும், தன்னையும் தனது சகோதர செம்மறியாடுகளையும் விட்டுவிடும்படி கேட்டது. ஆனால், அப்போது அனைத்து செம்மறியாடுகளும் வேட்டையாடப்பட்டிருந்தன.
வேட்டையாடப்பட்ட செம்மறியாடொன்றின் இறைச்சித் துண்டொன்றைக் கொண்டு வந்த வேட்டையாட வந்த சிங்கம், செம்மறியாட்டு கூட்டத்தைச் சேர்ந்த சிங்கத்த்திடம் சாப்பிடுமாறு கொடுத்தது. அதை மறுத்த சிங்கம், ‘நான் தாவரங்களையே சாப்பிடுகிறேன். இது எனது சகோதரர்களின் இறைச்சி. என்னால் இதை சாப்பிட முடியாது.’ என்று சொன்னது.
மிகவும் சினமடைந்த வேட்டையாட வந்த சிங்கம், அந்த இறைச்சித் துண்டை செம்மறியாட்டு கூட்டத்தில் வளர்ந்த சிங்கத்தின் வாயில் வைத்து ஒரே அடியாக தொண்டை வரை தள்ளிவிட்டது. அந்த இறைச்சித் துண்டு மெதுவாக குடல் வழியே இரைப்பையை சென்றடைந்ததும், சிங்கத்தின் குரலொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. செம்மறியாட்டுக் குட்டி போல் கத்திக் கொண்டிருந்த சிங்கம், எல்லா சிங்கங்களையும் போல் கர்ச்சிக்கத் தொடங்கியது…
இறுதியில்… தான் பிறப்பால் ஒரு சிங்கம். ஆனால், செம்மறியாட்டுக் கூட்டத்துடன் இதுவரை வாழ்ந்திருக்கிறேன் என்பதை அந்த சிங்கம் புரிந்துகொண்டது. பின்னர், சிங்கக் கூட்டத்தோடு சென்று வாழ்ந்து, நாளடைவில் அந்தக் காட்டுக்கே ஒரு மேன்மையான ராஜாவாகியது.
……………
இந்தக் கதையிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்னவென்றால்… நாம் நம்மை பற்றி நம் மனதில் எதை நினைத்திருக்கிறோமோ, அதுவாகத்தான் நாம் இருப்போம். நம்மால் அதை செய்ய முடியாது. இதை செய்ய முடியாது என்று சமூகமும், நம் பெற்றோர்களும், நண்பர்களும் நம்மிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமும் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நம்மால் அந்தக் காரியங்களை செய்ய முடியுமாக இருக்கும்.
சமூகத்தில் உங்களுக்குத் தெரிந்த சிலர், சில விடயங்களைச் செய்ய முயற்சித்து தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், அவர்களின் வெற்றி தோல்வி – உங்களுக்கு அந்த விடயத்தை செய்ய முடியுமா? முடியாதா? என்பதை நிர்ணயிக்காது. எனவே, நீங்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது.
வாழ்வில் முன்னேறிய அனைவரும் தம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்துத்தான் வாழ்ந்தார்கள். அவர்களை சமூகம் எவ்வளவுதான் எள்ளிநகையாடிய போதும் ‘என்னால் முடியும்’ என்று அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மாபெரும் ஆளுமைகளான ஆபிரஹாம் லின்கன், பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற ஆளுமைகளுக்கு அவர்களது சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதேபோல் பல விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏனையோரின் பொய்யான கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, கழுகாகப் பிறந்து கோழியாக வாழ்ந்து, கோழியாகவே மரணித்த கழுகைப் போன்று உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போகிறீர்களா? அல்லது, சிங்கமாகப் பிறந்து, செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்தாலும், பின்னர் தான் ஒரு சிங்கம் என்பதை உணர்ந்து, சிங்கமாக வாழ்ந்து, சிங்கமாகவே மரணித்த சிங்கத்தைப் போன்று வாழப் போகிறீர்களா? என்பதை இன்று நீங்கள் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், முடிவெடுக்கும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்றான். இந்த அருள் அவனிடமிருந்து கிடைத்திருக்கின்றது.
இன்றே முடிவெடுப்போம்!
0 Comments