நம் ஒவ்வொருவரிலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன. ஆம், உங்களிலும் என்னிலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன. அவை பற்றிய ஒரு கதையைத்தான் நாம் இன்று பார்க்கப் போகின்றோம்.

இந்தக் கதை அமெரிக்காவிலும்  வாழ்ந்த செவ்விந்தியர்களின் செரோகிஸ் எனும் கோத்திரத்தாரிடம் உள்ள ஒரு கதையாகும். இந்தக் கோத்திரத்தாரின் கல்விக்கூடங்களில் மூத்தோர் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வழக்கம் உள்ளது.

இப்படி ஒரு தடவை ஒரு மூத்த ஆசான், சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ‘என்னிலும், உங்களிலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன. இப்படி உலகத்தில் உள்ள எல்லோரிலும் இரண்டு ஓநாய்கள் வாழ்கின்றன.’ என்று கூறினார்.

இந்தத் தகவலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஒரு மாணவன், ‘எல்லலேரிடமுமா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டான். அதற்கு அந்த மூத்தவர், ‘ஆம்… எல்லோரிடமும்தான் உள்ளன. உங்களிலும் உள்ளன. என்னிலும் உள்ளன.’ என்று பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் சொன்னார்…

‘இந்த இரண்டு ஓநாய்களிலும் ஒரு  ஓநாய் கருப்பு நிறமானது. அது பயம், கோபம், துவேசம், நம்பிக்கையின்மை போன்ற எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டுள்ளது. அடுத்தது வெள்ளை நிற ஓநாய். இந்த ஓநாய் அன்பு, பாசம், நம்பிக்கை, வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம், ஏனையோருக்கு உதவும் எண்ணம் ஆகிய நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றது. நம்மில் இருக்கும் இந்த இரண்டு ஓநாய்களுக்கும் இடையில் ஒவ்வொரு நிமிடமும் சண்டை நடந்துகொண்டே இருக்கும்.’

ஆசிரியர் இந்த விடயத்தைச் சொன்னதும், ஒரு மாணவன் எழுந்து கேட்டான்: ‘ஆசானே… இதில் எந்த ஓநாய் வெற்றி பெறும்’

அப்போது அந்த வயதான ஆசான் மாணவனைப் பார்த்து புன்னகைத்து சொன்னார்: ‘நீங்கள் எந்த ஓநாய்க்கு அதிகமாக உணவு வழங்குகின்றீர்களோ, அந்த ஓநாய் தான் வெற்றி பெறும்.’

***     ***     ***

உண்மையில் இது மிக ஆழமானதொரு கருத்தாகும். நாம் எப்படிப்பட்ட சிந்தனைகளை சிந்திக்கின்றோமோ, எதை முன்னெடுக்கின்றோமோ, அதன் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை அமையும் என்பதை இக்கதை அழகாகச் சொல்கின்றது.

சிலர் ஒரு புதிய நாளைத் தொடங்குகின்றபோது – காலை முதலே ஏனையோரின் குறைகள், குற்றங்களை கதைத்துக் கொண்டும், ஏனையோர் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டும் இருப்பார்கள்.

வாழ்க்கையில் தாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இப்படியானவர்களுக்கு இருக்கும். ஆனால், அவர்களால் முன்னேற முடியாது. ஏனெனில். அவர்களது வாழ்வில் அவர்கள் அதிகமாக தீனி போட்டிருப்பது கறுப்பு நிற ஓநாய்க்கே…

இன்னும் சிலர் எப்போதும் நல்ல விடயங்களைப் பேசுவார்கள். நல்ல பண்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். ஏனையோருக்கு உதவிகள் புரிவார்கள். உதவிகள் செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாதிருப்பார்கள். இப்படியானவர்கள் எப்போதும் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதால் முன்னேறியதாக மக்கள் சொல்லத் துணிவார்கள். ஆனால், இவர்களின் முன்னேற்றம் அதிர்ஷ்டத்திலோ, எங்கோ தொலைதூரத்திலிருக்கும் கிரகங்களிலோ, இவர்கள் பிறந்த மண்ணிலோ, வாழும் இடத்திலோ, கல்வித் தகைமைகளிலோ தங்கியிருப்பதில்லை.

நீங்கள் என்ன மாதிரியான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றீர்களோ அப்படித்தான் நீங்கள் உறுப்பெறுவீர்கள். இந்தக் கதையில் வருவது போல் சொல்வதென்றால், நீங்கள் எந்த ஓநாய்க்கு தீனி போடுகின்றீர்களோ அந்த ஓநாய் வலுப்பெற்று, அடுத்த ஓநாயை எதிர்த்து, தாக்கி, வீழ்த்தி, உங்கள் வாழ்வை அளும் ஓநாயாக மாறும். அது வெள்ளை நிற ஓநாயாகவும் இருக்கலாம். கறுப்பு நிற ஓநாயாகவும் இருக்கலாம்.

இந்தக் கதை சொல்லும் எண்ணக்கரு மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கதையிலிருந்து நீங்கள் படிப்பினை பெற்றால், அது நிச்சயம் உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமையும்.

***     ***     ***

உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.

கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்!

வாழ்க என்றும் வளமுடன்!

வளவாழ்வு குரூப் இல் இணைய இங்கு கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/groups/1189863434394830/

#valavaalvu