இது இந்த வருடத்தின் முதல் நாள்…

இந்த வருடத்தை எவ்வாறு திட்டமிட்டுக்கொள்வது என்பது பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்வதாக, ஏற்கனவே வாக்களித்திருந்தேன். எனவே, இப்பகுதியில் அது பற்றி ஆரம்பித்து வைப்போம்.

ஒவ்வொரு வருடத்திலும் என்ன செய்யப் போகின்றோம் என்பதை திட்டமிட்டுக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். ஆனால், அதற்கு முன்னர் நாம் எல்லோரும் விடும் ஒரு தவறு குறித்துப் பார்ப்போம். அதாவது சென்ற வருடத்தில் நாம் பெற்ற படிப்பினைகள், சென்ற வருடத்தில் கிடைத்த வெற்றிகள் பற்றி எதவுமே சிந்திக்காமல், சாதாரணமாகவே புதிய வருடத்தை திட்டமிடும் ஒரு போக்கு நிலவுகின்றது.

இன்னும் சிலர் சென்ற வருடத்தின் இறுதியில், அதாவது நவம்பர், டிசம்பர் காலப் பகுதிகளில் நடைபெற்ற கசப்பான சுமைகளை சுமந்துகொண்டு புதிய வருடத்தை ஆரம்பிக்கிறார்கள். சென்ற வருடம் ஒருவரது வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். ஒரு மாணவராயின் அவரது கல்வியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கலாம். இவர்கள் இந்த சுமைகளை சுமந்துகொண்டு புதிய வருடத்தை ஆரம்பிக்கிறார்கள். இதுவும் மிகவும் பிழையான ஒரு வழிமுறையாகும்.

புது வருடத்தை ஆரம்பிக்க முன் சென்ற வருடத்தை முழுமைப்படுத்வோம்

நாம் ஒரு புதிய வருடத்தை திட்டமிட முன்னர், சென்ற வருடத்தை முழுமையாக முழுமைப்படுத்த வேண்டும். அந்த விடயத்தைத்தான் இங்கு நாம் பார்க்க உள்ளோம்.

நாம் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்களில் எழலாம். சென்ற வருடத்தின் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமானவையாக அமைந்திருக்கும். எனவே, சென்ற வருட வாழ்வின் பல்வேறு காலப் பகுதிகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்று பகுப்பாய்வு செய்வது மிகவும் பிரயோசமானதாகும்.

சில மாதங்களில் என்னென்ன நடைபெற்றன என்பதை நாம் மறந்திருப்போம். சிலவேளை, சில செயற்றிட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்திருப்போம். வியாபார இலக்குகளை அடைந்திருப்போம். சில பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்றிருப்போம். ஆனால், நாம் இவற்றையெல்லாம் மறந்திருப்போம். ஏனெனில், எதிர்மறையான விடயங்களை யோசிக்கும் வகையிலேயே நமது மூளைகள் பழக்கப்பட்டிருக்கின்றன. இனி வரும் வீடியோக்களில் இவை பற்றியும் பேசவுள்ளோம்.

சென்ற வருடத்தின் எதிர்மறையான சுமைகளை சுமந்துகொண்டு புதிய வருடத்தை திட்டமிடுவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். எனவே, நாமாகவே உணர்ந்து சென்ற வருடத்தை முழுமையாக முழுமைப்படுத்தி விட்டு, புதிய வருடத்தை திட்டமிடுவது குறித்து இனி வரும் வீடியோக்களில் பார்ப்போம்.

சென்ற வருடத்தை முழுமைப்படுத்துவதற்கான வழிமுறை இதுதான்!

இந்த வீடியோவில் – சென்ற வருடத்தை எவ்வாறு முழுமைப்படுத்துவது?, அதிலிருந்து எவ்வாறு படிப்பினைகள் பெறுவது? என்பது குறித்துப் பார்ப்போம்.

இந்தப் பணியை செய்ய முன்னர், ஒரு தடிப்பான அட்டை கொண்ட அழகான பயிற்சிப் புத்தகமொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் புத்தகத்தை எதிர்வரும் 5 வருடங்களுக்கேனும் நீங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளதால், சாதாரண பயிற்சிப் புத்தகளை வாங்காது, சிறந்த தடிப்பான அட்டை கொண்ட நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிற்சிப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

1. சரியாக நடைபெற்றவை!

முதலாவதாக ஒரு பக்கத்தில் சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் என்று தலைப்பிடுங்கள். அதற்குக் கீழ் அந்த ஜனவரியில் ‘சரியாக நடைபெற்ற விடயங்கள்’ என்று உப தலைப்பிட்டு, அப்படியானவற்றை பட்டியலிடுங்கள்.

உங்களுக்கு நிகழ்ந்த நல்ல விடயங்களை அதில் குறிப்பிடுங்கள். நீங்கள் பெற்ற வெற்றிகள், நீங்கள் அடைந்த இலக்குகள் எல்லாவற்றையும் எழுதுங்கள். அம்மாதத்தில் உங்கள் கட்டுரையொன்று பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கலாம். ஒரு போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். இப்படி நீங்கள் சந்தோசமடையும் எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள்.

ஜனவரியில் நடைபெற்ற விடயங்கள் உங்களுக்கு சரியாக நினைவில் இல்லையென்றால், உங்கள் பேஸ்புக்கில் அம்மாததத்தில் பகிர்ந்த விடயங்களைச் சென்று பாருங்கள். அதில் உங்களது வெற்றிகளை, சாதனைகளை, அடைவுகளை பகிர்ந்திருப்பீர்கள். அதிலிருந்து தரவுகளைப் பெற்று பட்டியலிடுங்கள்.

நான் பொதுவாக தனிப்பட்ட நாற்காட்டியில் குறித்து வைத்திருப்பேன். எனவே, அதிலிருந்து தரவுகளைப் பெற்று பட்டியலிடுவேன். அல்லது அம்மாதத்தில் நான் பரிமாறிய மின்னஞ்சல்களைப் பார்ப்பேன். அதிலிருந்து தரவுகளைப் பெற்று பட்டியலிடுவேன்.

2. சரியாக நடைபெறாதவை!

இரண்டாவதாக, அந்த ஜனவரியில் எதுவெல்லாம் ‘சரியாக நடைபெறவில்லை’யோ அவற்றை பட்டியலிடுங்கள்.

அம்மாதத்தில் ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருப்போம். ஆனால், அது நடைபெற்றிருக்காது. எனவே, இந்தத் தகவலை இப்பகுதியல் எழுதலாம். இப்படியான விடயங்களை எழுதும்போது, சென்ற வருடத்தை சுய விசாரணை செய்துகொள்ளலாம்.  

3. நீங்கள் பெறும் படிப்பினை!

மூன்றாவதாக, எதுவெல்லாம் சரியாக நடைபெற்றவில்லையோ, அவற்றிலிருந்து ‘பெறும் படிப்பினை’களை எழுத வேண்டும்.

உதாரணமாக ஜனவரியில் ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தீர்கள். ஆனால், அதனை உங்களால் செய்ய முடியாது போனது. எனவே, இதற்கான காரணங்களை கண்டறிந்து, பின்னர் இப்புத்தகத்தை எவ்வாறு வாசிக்கலாம் என்பதை திட்டமிடலாம்.

அப்புத்தகம் 300 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இருந்தால், நாளொன்றுக்கு 10 பக்கங்கள் வீதம் வாசித்தால், ஒரு மாதத்தில் மிக இலகுவாக அப்புத்தகத்தை வாசித்து முடிக்கலாம் என்று படிப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தான் உங்கள் வழிகாட்டி!

இப்படித் திட்டமிடுகின்றபோது, உங்களை நீங்களே வழிநடாத்திக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்களே பயிற்றுவிப்பாளராக இருக்கலாம். எனவே, இந்த மூன்று வகையான தலைப்புக்களின் கீழில், அதாவது

  1. எவை சரியாக நடைபெற்றன?
  2. எவை சரியாக நடைபெறவில்லை?
  3. சரியாக நடைபெறாததிலிருந்து பெறும் படிப்பினை என்ன?

ஆகிய தலைப்புக்களின்படி உங்கள் ஒவ்வொரு மாதத்தின் அடைவுகளையும், அடையாதவைகளையும் சுய விசாரணை செய்து பார்த்தால், உங்களுக்கு உங்களது கடந்த வருடம் குறித்த ஒரு தெளிவு கிடைக்கும். கடந்த வருடத்தின் சந்தோசமான தருணங்களை நீங்கள் அசை போட்டுப் பார்ப்பீர்கள். அப்போது நீங்கள் சந்தோசமடைவீர்கள்.

இப்படிச் செய்யும்போது, சென்ற வருடத்தின் இறுதி ஓரிரண்டு மாதங்களில் நடைபெற்ற வீழ்ச்சிகள், கஷ்டங்கள் பற்றிய சுமை உங்களை கஷ்டப்படுத்தாது. அப்போது உங்களுக்குள் ஏற்படும் உத்வேகம், உந்துதல் காரணமாக புதிய வருடத்தை நீங்கள் உற்சாகமாத் திட்டமிடுவீர்கள்.

சென்ற வருடத்தின் உணர்வுபூர்வமான சுமைகளை இறக்க வைத்துவிட்டு புதிய வருத்தில் நுழையும்போது, உங்கள் இலக்குகளை இன்னும் இன்னும் அடைவீர்கள்.

***     ***     ***

உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.

கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்!