The richest man in Babylon   என்ற புத்தகம் ஜோர்ஜ் சாமுவேல் கிளாசன் என்பவரால் 1926 இல் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் தமது பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் இப்புத்தகம் வழங்குகின்றது.

இப்புத்தகம் 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ளபோதும், இன்றைய சூழலுக்கும் பொருந்தி வருவதாகவே காணப்படுகின்றது.

பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பொருள் கொண்ட இப்புத்தகம் தனிநபர் பொருளாதார வழிகாட்டல்களை வழங்கும் ஏனைய புத்தகங்களையும் விட வித்தியாசமானதாகும்.

ஏனெனில், ஏனைய புத்தகங்களில் அதிகமான கோட்பாடுகளும், கலைச்சொற்களும் காணப்படுகின்றன. ஆனால், இப்புத்தகம் ஒரு கதையை மையமாக வைத்து, அதை நேர்த்தியாக நகர்த்திச் சென்று, அதன் ஊடாக வழிகாட்டல்களை வழங்கும் வழிமுறையைக் கையாண்டிருக்கின்றது.

பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட இரு நண்பர்கள் தமது சிக்கலகள் குறித்து கதைத்துக் கொள்கின்றனர். பின்னர், அந்த ஊரில் உள்ள ஒரு பணக்கார நபரிடம் சென்று, ஆலோசனை பெறுவதாக முடிவெடுக்கின்றனர். அந்தப் பணக்கார நபரைச் சென்றடைந்து, தமது சிக்கல்களைக் கூறியபோது, அவர் சில ஆலோசனைகளை வழங்குகின்றார். இதுதான் புத்தகத்தின் முதல் பகுதி.

இந்தக் கதையை ஒவ்வொரு பகுதியாக நகர்த்திச் சென்று, அதன் ஊடாக பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகிறார் நூலாசிரியர் ஜோர்ஜ் சாமுவேல் கிளாசன்.

இப்புத்தகத்தில் வரும் சில முக்கியமான கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை, எதிர்காலத்திற்காக சேமித்துக் கொள்ளுங்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். பெற்றோர்களும்கூட இதனைச் சொல்வார்கள்.

இங்கு சேமித்தல் என்பதன் பொருள், தற்போதைய தற்காலிக சுகங்களை விட்டுவிட்டு, ஒரு 50 வருடங்களுக்கு பின்னைய பயன்பாட்டுக்காக சேமிப்பதாகும். ஆனால், இப்படியெல்லாம் சேமிக்க வேண்டுமா? என்று வாலிபர்கள் சிந்திக்கிறார்கள்.

மூத்தோரும் பெற்றோரும், சேமியுங்கள் என்று சொல்லும்போது, அதை சேமித்து வேறு யாருக்கோ கொடுத்து விடப் போகிறோமோ என்றுதான் வாலிபர்கள் யோசிக்கிறார்கள்.

ஆனால், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், நாம் சம்பாதிப்பவற்றில் 10 சதவீதமானவற்றை நமக்கே கட்டணமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இது மிகவும் முக்கியமான ஒரு கோட்பாடாகும்.

‘நமக்கு நாமே கட்டணம் செலுத்திக்கொள்வதா? நாம் சம்பாதிப்பவை முழுமையாக நமக்குத் தானே!’ என்ற கேள்வி எழும்போது, அவர் தொடர்ந்தும் பின்வருமாறு விளக்குகிறார்:

‘நீங்கள் சம்பாதிப்பவற்றிலிருந்து வீட்டு வாடகை செலுத்துகிறீர்கள். நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் கடைக்குச் செலுத்துகிறீர்கள். உங்கள் ஆடைகளை தைத்துத் தருவோருக்கு செலுத்துகிறீர்கள். இப்படி இன்னோரன்ன பலருக்கும் கட்டணமாகச் செலுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் உங்களுக்கென்று ஏதாவது கட்டணம் செலுத்தவில்லையே!… எனவே, நீங்கள் சம்பாதிப்பவற்றில் 10 சதவீதமானவற்றை உங்களுக்கு கட்டணமாகச் செலுத்துங்கள்.’

இப் புத்தகத்தின் இன்னுமொரு பகுதியில், ஒருவர் தனது கடன் சுமையிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது. ஒருபோது அடிமையாகக் கூட விற்கப்பட்டு, அதிலிருந்தும் மீண்டு, தனது கடன்களை செலுத்தி விடுகிறார் அவர். இக்காலப் பகுதியிலும் கூட தனக்குரிய 10 சதவீதத்தையும் அவர் செலுத்திக் கொள்கிறார். இதுவெல்லாம் எப்படி சாத்தியம் என்பதை நூலாசிரியர் விளக்குகிறார்.

சரி… நமக்கு நாமே கட்டணமாக செலுத்திக் கொண்ட பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி எழுகின்றது. அதையும் இப்புத்தகம் அழகாக விளக்குகின்றது. அதாவது, இந்தப் பணம் நமக்கு பணிவிடை செய்ய வேண்டும். அதிலிருந்து வரும் இலாபமும், அந்த இலாபத்திலிருந்து வரும் இலாபமும்கூட நமக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் நூலாசிரியர். இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இந்தப் பணத்தை நாம் முதலீடு செய்ய வேண்டும்.

இந்நூலில் வரும் கதையில், ஒரு நபர் இவ்வாறு சேமித்த பணத்தைக் கொண்டு என்ன செய்தார் என்று வினவப்படுகின்றது. அதற்கு அந்த நபர், செங்கற்கள் செய்யும் ஒரு தொழிலாளி தூர தேசம் செல்லும்போது, அவரிடம் அப்பணத்தைக் கொடத்தனுப்ப, அவர் அதற்கு மாணிக்கங்கள், வைரங்கள் எடுத்து வருவார். அதை விற்று வரும் பணத்தை சரி சமமாகப் பகிர்ந்துகொள்கின்றோம் என்கிறார்.

பின்னர், அவருக்கான ஆலோசனை பின்வருமாறு வழங்கப்படுகின்றது.:

‘நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள். நாம் ஒருபோதும் வானவியல் தொடர்பான விடயங்களை, ஒரு bakery யை நடாத்திச் செல்பவரிடம் கேட்போமா? இல்லையே… நாம் ஒரு விடயம் குறித்து ஆலோசனை பெறும்போது, அவ்விடயம் குறித்த நிபுணத்துவம் உள்ளவரிடம் தான் பெற வேண்டும். கடந்து சென்றதை விட்டு விடுங்கள். நீங்கள் மீண்டும் ஆரம்பியுங்கள்!’

இறுதியில் அம்மனிதன் பாபிலோனின் மிகப் பெரும் பணக்காரராக மாறுகிறார்.

*** *** ****

பொதுவாக பணம் தொடர்பில் பல பார்வைகளும் விம்பங்களும் காணப்படுகின்றன. உண்மையில், வாழ்வை மிக இலகுவாக கொண்டு செல்ல வேண்டுமாயின், சம்பாதிப்பதோடு சேர்த்து, சேமிக்கவும் வேண்டும்.

இப்புத்தக்தில் வரும் சில கருத்துக்கள் உங்கள் நம்பிக்கைகளுடன் முரண்படுவதாக இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள். நீங்கள் எப்போதும் ஒரு மாணவராக இருக்க வேண்டும் என்பதுவே எனது ஆலோசனை.

இந்த ஆங்கிலப் புத்தகத்தை மு. சிவலிங்கம் என்பவர் ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்’ என்று தமிழுக்கு பெயர்த்திருக்கிறார்.  தயா ரோஹன அதுகோராலா சிங்கள மொழிக்கு பெயர்த்திருக்கிறார். நீங்களும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.