வாய்ப்புக்களும் கடமையும்! – ஒரு கட்டிடக் கலைஞரதும் சீடரதும் கதை
உலகப் புகழ்பெற்ற ஒரு கட்டிடக் கலைஞர் இருந்தார். அவரிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும், அவரது மாணவராக சேர்ந்து கொள்ள வேண்டும் என பலர் ஆர்வமாக இருந்தனர். இப்படி ஒரு வாலிபர் அவரது மாணவராக சேர்ந்துகொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சித்துக் கொண்டிருந்தான். அக்கட்டிடக் கலைஞரிடம் சென்று, தன்னை ஒரு மாணவராக இணைத்துக்கொள்ளும் படி கெஞ்சி மன்றாடினான். அவரும் அவனை இணைத்துக்கொண்டார்.
சில காலம் சென்றது… அந்த வாலிபன் சிறந்த முறையில் வேலை செய்து வந்தான். எனவே, கட்டிடக் கலைஞரின் விருப்பத்துக்குரிய ஒரு மாணவராக மாறினான். எனவே, அவனுக்கு பதவி உயர்வுகளை வழங்கி. சிறந்த நிலைக்கு அவனை கொண்டு வந்தார் அந்தக் கட்டிடக் கலைஞர். இப்போது அவன் சிறந்த ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் கட்டிடக் கலைஞர் வாலிபனிடம் வந்து…
‘நான் வாழ்வில் உச்ச கட்டங்களை அடைந்து விட்டேன். இப்போது சற்று ஓய்வெடுக்க வேண்டுமென விரும்புகின்றேன். எனவே, 4 மாதங்கள் ஓய்வெடுக்கப் போகிறேன். ஆனால், இக்காலப் பகுதியில் நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டும். இக்காலப் பகுதிக்குள் எனக்காக ஒரு அழகான வீட்டை நீ கட்டித் தர வேண்டும்
‘இதைக் கட்டுவதற்கு நீ எங்கிருந்தும் மூலப் பொருட்களைக் கொண்டு வரலாம். எங்கிருந்தும் பொறியியலாளர்களை அழைத்து வரலாம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனால், மிகத் தரமானதாகவும், அழகானதாகவும் அந்த வீடு கட்டப்பட வேண்டும்.’ என்று கூறினார்.
இதைச் செவிமடுத்த வாலிபன், ‘நீங்கள் ஓய்வெடுக்கும் காலப் பகுதியில், உங்களுக்கு மிகத் தரமான, அழகான ஒரு வீட்டை கட்டித் தருவேன்.’ என்று பதிலளித்தான்.
இப்போது முதலாவது மாதம்…
வீட்டைக் கட்டுவதற்குத் தேவையான மூலப் பொருட்களைக் கொண்டு வர ஆரம்பித்தான் வாலிபன். பொறியியலாளர்களையும் அழைத்து வர ஆரம்பித்தான். ஆனால், எதையுமே முழுமையாக கொண்டு வந்து சேர்க்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பொடுபோக்காக இருந்து விட்டான்.
‘இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றனவே… எனவே வீட்டைக் கட்டும் வேலையை மெதுவாகச் செய்து கொள்ளலாம். இப்போது சற்று எனது வேலைகளைப் பார்த்துக்கொள்வோம். நானும் கொஞ்சம் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமே…’ என்று நினைத்துக் கொண்டான் அந்த வாலிபன்.
எனவே, வீட்டைக் கட்டும் வேலைகளை சற்று மறந்து விட்டு, தனது தனிப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினான். இப்படிக் காலம் கடந்து கொண்டிருக்கையில், இன்னும் ஒரே ஒரு மாதம் தான் எஞ்சியிருந்தது. கட்டிடக் கலைஞரின் ஓய்வுக் காலப் பகுதி முடிவடைவதற்கான காலம் நெருங்கியிருந்தது.
எனவே, மிக அவசர அவசரமாக வீட்டைக் கட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கினான். அவசரமாகக் கட்டி முடிக்க வேண்டியிருந்ததால், தரமான மூலப் பொருட்களை முழுமையாகக் கொண்டு வந்து சேர்க்க முடியாமல் போனது. எனவே, தரமற்ற மூலப் பொருட்களை பயன்படுத்தினான். நிபுணத்துவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களை அவசரமாகத் தேட முடியாதிருந்தது. எனவே, அனுபவமற்றோரை அழைத்து வந்தான். எப்படியோ வீட்டைக் கட்டி முடித்தான்.
ஓய்வுக் காலப் பகுதி முடிவடைந்து வந்த கட்டிடக் கலைஞர், அந்த வாலிபனிடம், ‘இளம் வாலிபனே! நீ கட்டி முடித்த வீடு எங்கே?’ என்று கேட்டார். அப்போது அந்த வாலிபன், கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று, இதுதான் உங்களுக்காகக் கட்டப்பட்ட வீடு என்று கூறி, வீட்டு திறப்பை கையளித்தான்.
திறப்பைப் பெற்றுக்கொண்ட கட்டிடக் கலைஞர் வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, என்ன மாதிரியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, வீடு எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்பதையெல்லாம் அவதானித்தார். பின்னர், வீட்டு வாசலுக்கு வந்து, அந்தத் திறப்பை வாலிபனிடம் கையளித்தார்.
அப்போது அந்த வாலிபன், ‘இது உங்களுக்காகக் கட்டப்பட்ட வீடு. ஏன் திறப்பை என்னிடம் தருகிறீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு அந்த கட்டிடக் கலைஞர், ‘நீ கடந்த 5, 6 வருடங்களாக எனக்காக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறாய். எனவே, உனக்கு ஒரு பரிசளிக்க விரும்பினேன். எனவேதான் இந்த வீட்டைக் கட்ட சொன்னேன். இத உனக்கான வீடு’ என்றார்.
அப்போது அந்த வாலிபன் கைசேதமடைந்து, ‘அடடா… இது எனக்கு கட்டப்படும் வீடு என்று நான் அறிந்திருந்தால் சிறந்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, நிபுணத்துவம் வாய்ந்த பொறியியலாளர்களை கொண்டு மிகத் தரமாகக் கட்டியிருக்கலாமே…’ என்று மனதுக்குள் வருத்தப்பட்டான்.
*** *** ***
இப்படியான நிலை எல்லோருக்கும் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் வாய்ப்புக்கள் வரும்போது அதை அழகாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு விடயத்தையும் இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்றில் அதை கடமைக்காக செய்து விட வேண்டும் என்று பார்க்கலாம். இல்லையெனில், அதை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பார்க்கலாம்.
ஒரு விடயத்தை கடமைக்குச் செய்ய வேண்டும் என்று பார்த்தால், ஏனோதானோ என்று பொடுபோக்காக செய்வோம். ஆனால், அதை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பார்த்தால் மிகவும் சிறந்த முறையில், நேர்த்தியாக அதைச் செய்து முடிப்போம்.
இன்னுமொரு படிப்பினையும் உள்ளது. அதாவது, எந்தக் காரியத்தையும் பிற்போடுவது உகந்ததல்ல. உதாரணமாக, க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரம் படிக்கும் மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகாமல், இறுதி நேரத்தில் படித்துக்கொள்ளலாம் என்று பிற்போட்டுக் கொண்டிருந்தால், இறுதி நேரத்தில் எதையுமே முறையாகப் படிக்க முடியாமல், பதட்டமும், கைசேதமும் தான் ஏற்படும்.
இது என்னை அதிகம் பாதித்த ஒரு கதை. இது உங்களுக்கும் பயனளிக்கும் என்று நினைக்கின்றேன்…
*** *** ***
உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.
வாருங்கள், கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்!
வாழ்க என்றும் வளமுடன்!
வளவாழ்வு குழுமத்தில் இணைய இங்கு கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/groups/1189863434394830/
0 Comments