Bronne Ware இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளை கண்காணிக்கும் ஒரு மருத்துவப் பிரிவின் தாதியாக கடமையாற்றினார். அவர் தனது பணியின் போது பல நோயாளிகளின் வருத்தங்களையும் அவர்களது எண்ணங்களையும் கூர்மையாக ஆராய்ந்தார். மேலும் அவர்களை எவற்றை பற்றி இறப்பதற்கு முன் வருந்துகின்றனர் அல்லது அங்கலாய்க்கின்றனர் என்பதனை பற்றி ஆய்வு செய்தார். இதன் விளைவாக சென்ற வருடத்தின் ஆரம்பத்தில், “இறக்கும் நிலையில் உள்ளவர்களின் வருந்தல்கள்” (Regrets of dying) பற்றி ஒரு தொகுப்பை அவரது வலைபதிவில் எழுதியிருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக அது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனையொட்டி அவர் அந்த வலைபதிவு தொகுப்பினை ஒரு புத்தகமாக “சாகும் நேரத்தில் தோன்றும் முக்கியமான ஐந்து ஏக்கங்கள்” (The Top Five Regrets of the Dying) என்ற தலைப்பில் வெளியிட்டார். நான் அந்த புத்தகத்தினை இன்னும் படிக்கவில்லை. ஆனால் அந்த வலைபதிவினை நீங்கள் படிக்க பரிந்துரைக்கிறேன். அந்த தொகுப்பின் சுருக்கத்தினை இத்துடன் குறிப்பிடுகிறேன்.

சாகும் முன் தோன்றும் ஐந்து முக்கியமான ஏக்கங்கள்:

  1. நான் மற்றவர்களின் எண்ணங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்ததை விட என்னுடைய உள்ளத்திகு உண்மையாளனாக வாழ்ந்திருக்கலாமே என ஆசைபடுகிறேன்.
  2. நான் எனது வேலையிலேயே முழு மூச்சாக ஈடுபட்டதை கொஞ்சம் குறைத்து எனது குடும்பத்துடன் அதிக நேரங்களை கழித்திருக்கலாமே என ஆசைப்படுகிறேன்.
  3. என்னுடைய உணர்வுகளை (feelings) உள்ளபடி வெளிப்படுத்துவதற்கு உண்டான தைரியத்தை பெற்றிருக்கலாமே என ஆசைப்படுகிறேன்.
  4. என்னுடைய நண்பர்களுடன் என்றும் தொடர்பில் இருந்திருக்க ஆசைபடுகிறேன்.
  5. நான் என்னை மகிழ்ச்சியாக வாழ அனுமதித்திருக்கலாமே என ஆசைப்படுகிறேன்.

இந்த வருத்தங்கள் அல்லது ஏக்கங்கள் இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படுபவை என்று வரையறை செய்துவிட இயலாது. எனது அனுபவத்தில் பல தொழில் முனைவோர்கள், சுயமுன்னேற்ற பேச்சாளர்கள், கவர்சிகரமான இலாபத்துடன் இயங்கும் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் என அனைவரும் இவற்றை பற்றி அங்கலாப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்த 5 விடயங்கள் என்னில் பாரியதொரு தாக்கதை ஏற்படுத்தியது. இவ்வாறு வயதான காலத்தில் அல்லது வாழ்க்கை விடைபெறப்போகும் தருணத்தில் இவற்றை பற்றி ஏங்குவதை விட இப்பொழுதே அதற்கு உண்டான செயல்களில் அக்கறையுடன் ஈடுபடுதல் வாழ்கையில் ஏற்படக் கூடிய மிகப்பெரிய ஏமாற்றங்களை தவிர்க்கும் என்பதை உணர்தேன். எனவே இந்த 2013 ஆம் ஆண்டின் முக்கியமான புதுவருட முன்மொழிகளாக (New year resolutions) இவற்றை எழுதிக் கொண்டேன்.

Bronne Ware-இன் ஐந்து “ஏக்கங்கள்” என்பதனை மாற்றி நான் ஐந்து முன்மொழிகளாக இந்த கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

புது வருடத்திற்க்கான ஐந்து முக்கியமான முன்மொழிகள் :

  1. உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்த வகையிலும் உங்களுக்கு நேர்மையான வகையிலும் வாழுங்கள். (மற்றவர்கள் வலுக்கட்டாயமாக உங்களிடம் திணிக்க நினைக்கும் எதிர்பார்புகளுக்காக அல்ல).
  2. எல்லை மீறி உழைக்காதீர்கள். (உங்களின் குடும்ப வாழ்வுக்கும் சமமாக கவனம் செலுத்துங்கள்).
  3. உங்கள் மனதிற்கு ‘சரி’ என நினைக்கும் விடையத்தை பேசுங்கள் (நேர்மை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்)
  4. உங்களின் நண்பர்களுடன் எப்பொழுதும் தொடர்புடன் இருங்கள். (உறவுகள் என்றும் முக்கியமானவை).
  5. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் (மகிழ்ச்சி என்பது உங்களின் தேர்வே தவிர ஒரு விளைவுப்-பொருள் [ by product] கிடையாது.)

நான் இந்த ஐந்து முன்மொழிகளை இந்த வருடம் முழுவதும் கடைபிடிக்க உறுதி பூண்டுள்ளேன். எனவே இவற்றை நான் நகல் எடுத்து எனது அலுவலகத்தில் எனக்கு முன் தோன்றும் படி ஒட்டியுள்ளேன்.எப்பொழுதும் இவற்றை அடிக்கடி நினைவு படுத்தவும் மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படவும் இது பேருதவியாய் இருக்கும்.

இவை உங்களுக்கும் ஊக்கமூட்டும் வகையில் இருந்தால் இதனை அச்சிட்டு உங்களின் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஒட்டி கொள்ளுங்கள். இதன் பிரதியை நீங்கள் கீழே தரவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

new_year_resolution_pdf_sample

நீங்களும் உங்கள் புதுவருட முன்மொழிகளை தயார் படுத்திவிட்டீர்களா? அவற்றில் சுவரசியமனவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே comment பண்ணுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!